
சீனாவுக்கு பாடம் கற்பிக்க அரவிந்த் கெஜ்ரிவால் புதுயோசனை..!!
டிசம்பர் 9ம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே தாக்குதல் நடந்தது. இது நாடு முழுவதும் பெரும் பேச்சாக உள்ளது. இதற்கு மத்திய அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் யாங்சே பகுதியில் உள்ள நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்றும் சீன ராணுவத்தின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்ததாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சீனாவுடனான வர்த்தகத்தை ஏன் நிறுத்தக்கூடாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “நாம் ஏன் சீனாவுடனான வர்த்தகத்தை நிறுத்தக்கூடாது..? சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. சீனாவுடனான வர்த்தகத்தை நிறுத்துவதன் மூலம் சீனாவுக்கு பாடம் கற்பிக்க முடியும். அதே சமயம். காலப்போக்கில், இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.” என்று கூறியுள்ளார்.