
ஏர்போட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் மோசடி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் பி.எஸ்.சி. படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது இன்ஸ்ட்டாகிராமில் பெண் பெயர் போட்டு ஒருவர் அந்த வாலிபருக்கு குறுந்தகவல் அனுப்பினார். நான் பெங்களூர் ஏர்போர்ட்டில் வேலை பார்த்து வருகிறேன். பணம் கொடுத்து தான் அந்த வேலையில் சேர்ந்தேன் . உங்களுக்கும் ஏர்போர்ட்டில் வேலை வேண்டும் என்றால் பணம் அனுப்புங்கள் என ஆசை வார்த்தை கூறினார் .
இதனை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து வேலைக்கு சேர்வதற்கான போலி அனுமதி விண்ணப்பத்தை அந்த மர்ம நபர் வாலிபருக்கு அனுப்பி வைத்தார். இதனை பதிவிறக்கம் செய்து கொண்டு வாலிபர் பெங்களூர் ஏர்போர்ட்டுக்கு சென்றார். அங்கு இந்த அனுமதி விண்ணப்பத்தை கொடுத்த போது தான் அது போலியானது என்று தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தன்னை மோசடி செய்து விட்டனர் என்று தெரிந்த அந்த வாலிபர் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் . அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு ) ராமதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.