
தொடர் மழையால்..பெங்களூருவில் மக்களை வாட்டி வதைக்கும் குளிர்..!!
மாண்டஸ் புயல் காரணமாக கர்நாடகாவில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பெங்களூரு, சிக்கமகளூரு, துமாகூர், கோலார் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இரவு பகலாக மழை பெய்து வருகிறது. நேற்று 4வது நாளாக மழை பெய்தது. மழையால் துணிகளை துவைக்கவும், உலரவும் முடியாமல் இல்லத்தரசிகள் தவித்து வருகின்றனர். மழையுடன் குளிரும் சேர்ந்து வருவதால் பெரும்பாலான வீடுகளில் மின்விசிறிகள், குளிரூட்டிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. வெளியில் செல்பவர்கள் ஸ்வெட்டர், மப்ளர் அணிந்து செல்கின்றனர்.
தொடர் மழை மற்றும் கடும் குளிரால் பெங்களூரு நகர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் மக்கள் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, மழையால் நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், நீண்ட தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நேற்று 4வது நாளாக கனமழை பெய்த நிலையில், மதியம் சிறிது நேரம் வெயில் தென்பட்டது. ஆனால் மாலை 6 மணிக்கு மேல் நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது.