ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டி : சந்தர்பால் மகன் சதமடித்து அசத்தல் – Dinaseithigal

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டி : சந்தர்பால் மகன் சதமடித்து அசத்தல்

சில ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான சந்தர்பால் தற்போது தனது மகனை கிரிக்கெட் வீரராக உருவாக்கியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் சந்தர்பால் மகன் தேஜ்நரைன் சந்தர்பால் இடம்பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பயிற்சி ஆட்டத்தில் பிரதமர் லெவன் அணிக்கு எதிராக தொடக்க வீரராக களமிறங்கிய தேஜ்நரைன் சந்தர்பால், ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிதானமான விளையாடி சதம் விளாசினார்.

இடதுகை பேட்ஸ்மேனான தேஜ்நரைன் சந்தர்பால், 293 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 119 ரன்கள் சேர்த்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தேஜ்நரைன் சந்தர்பாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டில் வெஸ்ட் இண்டீஸ் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை விளாசியுள்ள தேஜ்நரைன் சந்தர்பால், 73.16 என்ற பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியில் தேஜ்நரைன் சந்தர்பால் செயல்பாடுகள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்களின் வாரிசுகள் பெரிய அளவில் சோபிக்க தவறி வந்துள்ளனர். இதனை சந்தர்பால் மகன் தேஜ்நரைன் சந்தர்பால் மாற்றிக் காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *