அவதூறு வார்த்தைகள் பேசுவது மூத்த தலைவருக்கு அழகல்ல: சச்சின் பைலட் – Dinaseithigal

அவதூறு வார்த்தைகள் பேசுவது மூத்த தலைவருக்கு அழகல்ல: சச்சின் பைலட்

ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சச்சின் பைலட் ஒரு துரோகி, அவர் முதல்-மந்திரி ஆக முடியாது என்று அசோக் கெலாட் கூறியிருந்தார்.

இதனிடையே தனியார் செய்தி நிறுவனத்துக்கு சச்சின் பைலட் அளித்த பேட்டியில், அசோக் கெலாட் என்னை குறிவைத்து பேசி இருப்பதை பார்த்தேன். என்னை ‘துரோகி’, ‘உபயோகம் இல்லாதவன்’ என்றெல்லாம் அவர் கூறி இருக்கிறார். இத்தகைய அவதூறு வார்த்தைகளை பேசுவது நீண்டகால அனுபவம் வாய்ந்த, ஒரு மூத்த தலைவருக்கு அழகல்ல.

அவர் சொல்வது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள். நீண்ட காலமாகவே அசோக் கெலாட் என் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்த நேரத்தில் நாம் பா.ஜனதாவுக்கு எதிராக ஒற்றுமையாக போராட வேண்டும். அசோக் கெலாட் மூத்த பார்வையாளராக உள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியின் கரத்தையும், கட்சியையும் வலுப்படுத்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இது, பா.ஜனதாவை தோற்கடிக்க ஒன்றுபட்டு போராட வேண்டிய நேரம். ஏனென்றால், காங்கிரசால் மட்டுமே பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும். இந்த நேரத்தில் மாறி மாறி சேறு வாரி வீசுவது, எந்த பயனையும் அளிக்காது என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *