ஆசிரியர் மீது நடைபெற்ற மோசமான தாக்குதல் – ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் – Dinaseithigal

ஆசிரியர் மீது நடைபெற்ற மோசமான தாக்குதல் – ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்

இலங்கையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலரால் ஊடகவியலாளர்கள் இருவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு , அவர்களின் பணிக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாண தலைமை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒஸ்மானியா கல்லூரிக்குள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை ஒருவர் கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியரான து.கௌரிபாலன் என்பவர் மீது தாக்குதலை நடத்தியதில் ஆசிரியர் காயங்களுக்கு உள்ளான நிலையில் , யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அறிந்த இரண்டு ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடும் நோக்குடன் கல்லூரிக்கு நேரில் சென்று , சம்பவம் தொடர்பில் கேட்டறிய முற்பட்ட போது ,பழைய மாணவர்கள் ,பள்ளி நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் , ஊடகவியலாளர்களின் பணிக்கு இடையூறு விளைவித்து , அவர்களின் ஒளிப்பட கருவிகளை பறித்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமது கல்லூரி தொடர்பில் எந்த செய்தியும் வெளிவரக் கூடாது, என மிரட்டி ஊடகவியலாளர்களை மடக்கி பள்ளி வளாகத்தினுள் தடுத்து வைத்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து பள்ளிக்கு விரைந்த பொலிசார் ஊடகவியலாளர்களை அவர்களிடம் இருந்து விடுவித்துள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *