பெண்களுக்கான டபிள்யூ.டி.ஏ., சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி செப்டம்பர் 12 முதல் 18 வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடக்கிறது. தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இப்போட்டியில் ஒற்றையர் பிரிவில் 24 வீரர்கள் நேரடியாக பங்கேற்கின்றனர். 4 பேருக்கு வைல்டு கார்டு சலுகை வழங்கப்படும். 4 பேர் தகுதிச் சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு வருவார்கள்.
இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகள் உள்ளன. ஆடவருக்கான சென்னை ஓபன் டென்னிஸ் 2017ம் ஆண்டு வரை சென்னையில் நடைபெற்றது.பின்னர் போட்டி புனேவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சர்வதேச டென்னிஸ் சென்னை திரும்புகிறது. கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.2 கோடி. ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.26 லட்சம் பரிசுத் தொகையும், 280 தரவரிசைப் புள்ளிகளும் வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் வெற்றி பெறும் ஜோடிக்கு 9½ லட்சம் பரிசு வழங்கப்படும்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ் நேற்று காணொலி மூலம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘உலக தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் உள்ள பல வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான அங்கிதா ரெய்னா மற்றும் கர்மான் தண்டி ஆகியோர் வைல்ட் கார்டு பெறுவார்கள். மற்ற போட்டிகளின் அட்டவணை மற்றும் உடற்தகுதியைப் பொறுத்து, சானியா மிர்சா இந்த போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்வார்.