அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிடோ கிராமத்தை சேர்ந்த மிரம் தரோன் (வயது 17), ஜாணி யாயிங் (27) ஆகிய இருவரும் அருகில் உள்ள துதிங் பகுதிக்கு வேட்டையாட சென்றனர். சீன எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள இந்த பகுதியில் வைத்து இருவரையும் சீன ராணுவம் சிறைப்பிடித்தது. ஆனால் வாலிபர் ஜாணி யாயிங் அங்கிருந்து தப்பி வந்தார். ஆனால் சிறுவன் மிரம் தரோன் வீடு திரும்பவில்லை. அவனை சீன ராணுவம் கடத்திச்சென்றதாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து சீன ராணுவத்திடம் இருந்து சிறுவனை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த தொகுதியின் எம்.பி.யான தபிர் காவோ மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த நிலையில் அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ மிரம் தரோம் என்ற சிறுவனை இந்திய ராணுவத்திடம் சீனா ராணூவம் ஒப்படைத்துள்ளது. மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.