ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் மெட்விடேவ் போராடி வெற்றி – Dinaseithigal

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் மெட்விடேவ் போராடி வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் முதல் இரு செட்டுகளை இழந்து தடுமாறிய ரஷிய வீரர் மெட்விடேவ் அதன் பிறகு எழுச்சி கண்டு வெற்றி பெற்றார்.  ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த கால்இறுதி ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா), தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் பெலிக்ஸ் ஆஜர் அலியாசிம்முடன் (கனடா) மல்லுகட்டினார்.   மெட்விடேவுக்கு கடும் சவால் அளித்த 21 வயதான அலியாசிம் 4-வது செட்டில் 5-4 என்ற முன்னிலையுடன் வெற்றியின் விளிம்புக்கு வந்தார். அப்போது எதிராளியின் ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தற்காத்து நிம்மதி பெருமூச்சு விட்ட மெட்விடேவ், அதன் பிறகு சுதாரித்து மீண்டெழுந்து ஒரு வழியாக 5 செட் வரை போராடி அலியாசிம்மை அடக்கினார். 4 மணி 41 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் மெட்விடேவ் 6-7 (4-7), 3-6, 7-6 (7-2), 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது ஆண்டாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *