5 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி – Dinaseithigal

5 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபை கூட்டம் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வருகிற இந்த வேளையில் நடைபெறுகிற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்துகொள்கிறார்கள். பிரதமர் மோடியும் இந்த பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார். அதை ஏற்று பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) தனி விமானம் மூலம் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் நகருக்கு புறப்பட்டு செல்கிறார். ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள நிலையில், மோடி அமெரிக்கா செல்வது இதுவே முதல்முறை ஆகும். எனவே அவரது இந்தப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

பிரதமர் மோடியுடன் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர், நேற்று முன்தினம் நியூயார்க் சென்றுள்ளார். பிரதமர் மோடியுடன் செல்கிற உயர் மட்டக்குழுவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா மற்றும் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்துக்கு இடையே, வாஷிங்டனில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளின் குவாட் அமைப்பு தலைவர்கள் உச்சி மாநாடு, 24-ம் தேதி நடப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் தொடங்கிய பின்னர் முதல்முறையாக இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோருடன் நேரடியாக கலந்து கொள்வது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பிராந்திய விவகாரங்கள், பாதுகாப்பு விவகாரங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல், இணைய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணம், பருவநிலை மாற்றம் உள்பட பல விஷயங்கள் பற்றி விரிவாக பேசப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

குவாட் உச்சி மாநாட்டுக்கு இடையே (24-ம் தேதி), வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருதரப்பு வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். பயங்கரவாத அச்சுறுத்தல், ஆப்கானிஸ்தான் நிலவரம், பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதிக்கிறார்கள். அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

ஜோ பைடனை சந்திப்பதற்கு முன்பாக நாளை (23-ந்தேதி), இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை மோடி சந்தித்து பேச உள்ளார். கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதியான பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி பேசி இருந்தாலும், இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசுவது இதுவே முதல் முறை. அமெரிக்கா-இந்தியா நல்லுறவு தழைப்பதில் கமலா ஹாரிஸ் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

வாஷிங்டன் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, நியூயார்க் நகருக்கு செல்கிறார். அங்கு 25-ம் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் 76-வது அமர்வில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் அவர் 100-க்கும் மேற்பட்ட உலகத்தலைவர்கள் மத்தியில் பேசுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகளாவிய பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள சவால்கள், ஆப்கானிஸ்தான் நிலவரம், ஐ.நா. சபையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டியதின் தேவை, பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டியதின் அவசியம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லி திரும்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *