இளம் வயதில் நரைமுடி ஏன் தோன்றுகிறது ? – Dinaseithigal

இளம் வயதில் நரைமுடி ஏன் தோன்றுகிறது ?

பொதுவாக நாற்பது வயதை நெருங்கும்போதுதான் முடி நரைக்கத் தொடங்கும். முடிக்கும், சருமத்திற்கும் மெலனின் என்ற பொருள்தான் கறுப்பு நிறத்தை தருகிறது. இதனை உற்பத்தி செய்யக்கூடிய மெலானோசைட் திசுக்களின் செயல்திறன் குறையும்போது தான் நரை தோன்றுகிறது. வயதாகும் முன்பே, அதாவது 25 வயதிற்கு முன்பு நரை தோன்றினால் அது அகால நரையாகும். ஆனால் சிலருக்கு 20 வயதுக்கு முன்புகூட நரைக்கத் தொடங்கிவிடுகிறது. மெலானோசைட் திசுக்களின் வளர்ச்சியில் குறைபாடு இருந்தால் இளம் வயதிலேயே நரைக்கும். மூதாதையருக்கு இளம் வயதிலேயே நரைத்தால், பாரம்பரியமாக அது இளந்தலைமுறைக்கும் தொடரும். இன்னொரு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரந்தாலும், குறைவாக சுரந்தாலும் இளமையிலே முடி நரைக்கும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பாதிக்கக்கூடிய ஆட்டோ இம்யூன் வகையை சார்ந்த நோய்களாலும் நரை தோன்றும். பதற்றம், மனஅழுத்தம், புகையிலை பயன்பாடு போன்றவைகளாலும் விரைவில் நரை தோன்றும். முடியில் வெயில் அதிகம்படுவது அதன் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். முதலில் முடி உதிர்தல், பின்பு முடி வெடித்து கீறுதல் போன்ற பாதிப்புகள் தோன்றி, அடுத்து அகால நரைக்கு கொண்டு செல்லும். வீரியம் அதிகம் கொண்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் முடியின் வேர்களை பாதிக்கும். அது முடி உதிர்வை யும், அகால நரையையும் தோற்றுவிக்கும். அகால நரைக்கு சிகிச்சை பெற விரும்புகிறவர்கள், முதலில் ரத்த பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். சத்துக்குறை பாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்டறிவதோடு, தைராய்டு பாதிப்பு இருந்தாலும் கண்டுபிடிக்கவேண்டும். சத்துக்குறைபாடு, ஹார்மோன்களின் சீரற்ற நிலை போன் றவைகள் தெரியவந்தால் அதற்காக டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ளவேண்டும். சத்துணவுகளையும் சாப்பிடுவது அவசியம். முடியின் வெளிப்பகுதியில் பூசுவதற்கு ஸொராலென் வகை மருந்துகள் ஏற்றது. அதனை பூசிவிட்டு சிறிது நேரம் வெயிலில் நின்றால், முடிக்கு கறுப்பு நிறம் கிடைக்கும். எந்த மருந்தாக இருந்தாலும் டாக்டரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே உட்கொள்ளவேண்டும். டாக்டர் குறிப்பிடும் அளவில்தான் அதை எடுத்துக்கொள்ளவேண்டும். இணையதளத்தை பார்த்து சுய சிகிச்சைகள் மேற்கொள்வது ஆபத்தை உருவாக்கி விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *