புகார் கூறிய போபண்ணா, சானியா : டென்னிஸ் சங்கம் எச்சரிக்கை

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கு பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா இணை தகுதி பெற்று இருக்கிறது. இதில் இந்திய முன்னணி வீரர் ரோகன் போபண்ணா ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார். உலக இரட்டையர் தரவரிசையில் 41-வது இடம் வகிக்கும் ரோகன் போபண்ணா இது குறித்து தனது டுவிட்டர் பதிவில், ‘இரட்டையர் பிரிவுக்கு என்னையும், சுமித் நாகலையும் அகில இந்திய டென்னிஸ் சங்கம் பரிந்துரை செய்ததை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இருப்பினும் இந்த விஷயத்தில் வீரர்கள், அரசு உள்பட அனைத்து தரப்பினரையும் அகில இந்திய டென்னிஸ் சங்கம் தவறாக வழிநடத்துகிறது’ என்று கூறியிருந்தார். போபண்ணாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்திய வீராங்கனை சானியா மிர்சா ‘இது உண்மையாக இருந்தால் வெட்கக்கேடானது. நாங்கள் திட்டமிட்டபடி கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாட முடியாமல் போனதால் பதக்கம் வெல்லும் நல்ல வாய்ப்பை தியாகம் செய்வதாக கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய டென்னிஸ் சங்கம் பதிலடி கொடுத்துள்ளது. அதன் டுவிட்டர் பதிவில், ‘போபண்ணா, சானியா ஆகியோர் உண்மை நிலவரம் தெரியாமல் முறையற்ற கருத்துகளை தெரிவிக்கக்கூடாது. ரோகன் போபண்ணாவின் தரவரிசை திவிஜ் சரண் அல்லது சுமித் நாகலுடன் இணைந்து ஒலிம்பிக்குக்கு தகுதி பெறுவதற்கு போதுமானதாக இல்லை.

எந்தவொரு பிரிவிலும் பதக்கம் வெல்லும் வாய்ப்பை எப்படி இழக்க விரும்புவோம். நாங்கள் எல்லா வகையிலும் முயற்சி செய்தோம். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *