ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள்

கொரோனா சுவாச நோயாக இருப்பதால் சுவாச மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாடுகளை சீர்குலைக்கிறது. அதன் காரணமாக ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவும் குறைய தொடங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உடல் இயக்க செயல்பாடுகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காது. அப்படி ஆக்சிஜன் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டிருந்தால் உடல் உள் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உண்டாகும். இந்த காலகட்டத்தில் உடலில் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது அவசியம். உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள். கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் வெளிப்படாது. காய்ச்சல், இருமல், வாசனை இழப்பு, சுவை இழப்பு போன்ற அறிகுறிகளை உணரலாம். எனினும் சுவாசிப்பதற்கு சிரமம், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளை சிலர் உணரக்கூடும். உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மார்பு வலி உண்டாகக்கூடும். மார்பு நெரிசல் பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். நுரையீரல் மற்றும் சுவாசக்குழாய்களில் சளி படர்வது மார்பு நெரிசலுக்கு காரணமாக அமையும். இருமலும் சேர்ந்து அடர்த்தியான சளியை வெளியே கொண்டு வரும். சுவாசிக்கும்போது ஒருவிதமான ஒலியும் வெளிப்படக்கூடும். உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது எதிலும் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். சிந்தனை திறனும் பலவீனமடையும். மன குழப்பமும், தலைவலியும் ஒருசேர வாட்டிவதைக்கும். இவை ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டிருப்பதை தீர்மானிக்கும் அடையாளமாக இருக்கலாம். உதடுகள் நீல நிறமாகவோ அல்லது நிற மாற்றமாகவோ காட்சியளிப்பதும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருப்பதை குறிக்கும். இந்த மாற்றம், சயனோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மூச்சு விடுவதில் பாதிப்பு நேரும். வழக்கமாக சுவாசிக்கும்போது மூக்கு இயல்பாக இருக்கும். ஆனால் சுவாசத்தில் பிரச்சினை ஏற்படும்போது மூக்கின் முனைப்பகுதிகள் இரண்டும் விரிவடையும். நாசிப்பாதையின் திறப்பும் வழக்கத்தை விட விரிவடைந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *