இந்தியாவும், நியூசிலாந்தும் சவுத்தம்டனில் இன்று பலப்பரீட்சை

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று தொடங்குகிறது. 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையை பெற்றிருக்கும் 32 வயதான விராட் கோலி சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வாகை சூட வேண்டியது முக்கியமாகும். அது மட்டுமின்றி ஐ.சி.சி. போட்டிகளில் இந்திய அணி நியூசிலாந்தை புரட்டியெடுத்து 17 ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டவும் இப்போது அருமையான சந்தர்ப்பம் கனிந்துள்ளது. நியூசிலாந்து அணி ஐ.சி.சி. போட்டிகளில் இதுவரை 2000-ம் ஆண்டில் சாம்பியன் கோப்பையை மட்டுமே வென்றுள்ளது. 2015 மற்றும் 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று போனது. கடந்த 7 ஆண்டுகளில் பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ள நியூசிலாந்து அணிக்கு உலக அளவிலான கோப்பை ஏக்கத்தை தணிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிட்டாது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *