எந்த தோழி எந்த மாதிரியான சுபாவம் கொண்டவள் என்பதை கண்டறியும் பெண்கள்

ஆண்களை விட பெண்கள் அதிக நட்பு வட்டத்தை கொண்டிருப்பார்கள். தங்களுக்கு பிடித்தமான தோழிகளுடன் நெருங்கி பழகுவார்கள். எந்த தோழி எந்த மாதிரியான சுபாவம் கொண்டவள் என்பதை பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே கணித்துவிடுவார்கள்.
1. நம்பிக்கைக்குரியவர்கள்: மிகவும் நம்பகத்தன்மை கொண்டவர்களின் பட்டியலில் இந்த வகை தோழிகள் இடம் பிடித்திருப்பார்கள். மன தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை நம்பி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நம்பிக்கை கொண்டிருப்பார்கள். இந்த தோழிகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நெருங்கி பழகிக்கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.
2. ஷாப்பிங் பிரியர்கள்: இவர்கள் ஆடை தேர்வு விஷயத்தில் மெனக்கெடுவார்கள். தனக்கு மட்டுமல்ல உடன் வருபவர்கள் சிறந்த ஆடையை தேர்வுசெய்வதற்கும் வழிகாட்டுவார்கள். கடன் கொடுத்து உதவும் சுபாவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
3. பேச்சு துணைவர்கள்: இவர்கள் பொதுவாக சற்று வயதானவர்களாக இருப்பார்கள். அதாவது அம்மா ஸ்தானத்தில் இருப்பார்கள். அம்மாவிடம் பேசத் தயங்கும் விஷயங்களைக் கூட இவர்களிடம் பேசலாம்.
4. புலம்பி தீர்ப்பவர்கள்: தோழிகளில் சிலர் எப்போதும் தங்களுடைய பிரச்சினைகளை மற்றவர்களிடம் புலம்பி தீர்த்துக்கொண்டிருப்பார்கள். தங்களது மன பாரத்தை இறக்கி வைத்தது போன்ற உணர்வு வந்தபிறகுதான் விடை பெறுவார்கள். அடிக்கடி போன் செய்து தங்கள் பிரச்சினைகளை பேசிக்கொண்டே இருப்பார்கள்.
5. சமூக ஊடக நண்பர்கள்: இவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமாகி இருப்பார்கள். அல்லது வெளி இடங்களுக்கு சென்றிருந்தபோது சந்தித்து பேசி இருப்பார்கள். அந்த தொடர்பை சமூக வலைத் தளங்கள் மூலம் புதுப்பித்து இருப்பார்கள். பொதுவான விஷயங்களை மட்டுமே பேசுவார்கள். அவர்களின் பெயர்கள் கூட மறந்து போயிருக்கும்.
6. குடும்ப தலைவிகள்: திருமணத்துக்கு முன்பு வரை தோழிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்திருப்பார்கள். அதன் பிறகு நட்பு வட்டம் சுருங்கி கொண்டிருக்கும். எப்போதாவது தோழிகளுக்கு போன் செய்து பேசுவார்கள். முன்பு போல் நெருக்கமாக இல்லையே என்ற ஏக்கம் அவர்களின் பேச்சில் வெளிப்படும்.
7. தோழிக்கு நெருக்கமானவர்கள்: சில சமயங்களில் ஏதாவதொரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது நெருங்கி பழகும் தோழி வர முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். அவர் தன்னிடம் நெருங்கி பழகும் தோழியை அனுப்பி வைப்பார். அவர், தோழியின் இடத்தை நிரப்பும் ஆபத்பாந்தவனாக இருப்பார்.
8. வதந்தி பரப்புபவர்கள்: மற்றவர்களை பற்றிய தகவல்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். தங்களுக்கு பிடிக்காத தோழிகள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் கொள்வார்கள். மற்றவர்களிடம் பேசுவதற்கும் தயங்க மாட்டார்கள். அதேவேளையில் பிடிக்காதவர்களை பற்றி வதந்திகளை பரப்பிவிடுவார்கள். அதேவேளையில் தம்மை பற்றிய தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்வதற்கு விரும்பமாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *