உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடப்போவது யார்? : இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

சவுத்தம்டன்:

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று தொடங்குகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் நடத்தப்படும் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணிகளும் தலா 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடின. இதில் பெற்ற புள்ளிகளின் சதவீதம் அடிப்படையில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரேலியா மயிரிழையில் இறுதிசுற்று வாய்ப்பை நழுவ விட்டது.

இந்த நிலையில் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் விவரம்:-

இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்யா ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா.

நியூசிலாந்து: டிவான் கான்வே, டாம் லாதம், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ் அல்லது வில் யங், வாட்லிங், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி, அஜாஸ் பட்டேல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *