நாகை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் – 85 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை

நாகப்பட்டினம்:

ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணபலன்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அதன்படி நாகை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மண்டலத்தில் உள்ள நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், சீர்காழி என 11 பணிமனைகளில் இருந்து 521 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக 112 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் இருந்து 217 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் 50 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் மாவட்டத்தில் 85 சதவீத பஸ்கள் இயக்கப்பட வில்லை. அதே போல் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 48 பஸ்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 14 பஸ்களும் மட்டுமே நாகைக்கு இயக்கப்பட்டது.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நாகை மண்டலத்தில் இருந்து 90 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். இதனால் ஆட்டோக்களில் சென்றனர். நாகையில் இருந்து புதுச்சேரி, சென்னை, மதுரை என நீண்ட தூரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் எப்போதும் பயணிகள் கூட்டமாக காணப்படும் நாகை பஸ் நிலையம் நேற்று வெறிச்சோடி கிடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *