இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 12 வருடங்கள் கடந்த பிறகும் அங்கு பல இடங்களில் பகிரங்கமாக மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து ஜெனீவாவில் நடைபெற்று வரும் 46 வது மனித உரிமைகள் கவுன்சில் அமர்வில் நேற்று முன்தினம் காணொளி மூலமாக தனது அறிக்கை முடிவு குறித்தும் தீர்மான குறிப்பு பற்றியும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் மீஷெல் பச்லெட் விளக்கினார். அப்போது அவர் “எனது அறிக்கை குறிப்பிடுவது போல, உள்நாட்டு போர் முடிந்து சுமார் 12 வருடங்கள் கடந்த பிறகும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிசெய்யப்படவில்லை. கடந்த காலங்களில் நிலவிய அதே அடக்குமுறை, துன்புறுத்தல் போன்றவை இப்போது தொடர்ந்திருக்கிறது,” என்று மீஷெல் பச்சலெட் தெரிவித்துள்ளார்.
