அகமதாபாத் மைதான ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 112 ரன்னும், இந்தியா 145 ரன்னும் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 81 ரன்னில் சுருண்டது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 49 ரன் இலக்கை இந்தியா விக்கெட் இழப்பின்றி எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் அகமதாபாத் மைதான ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்துள்ளனர். முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமணன் கூறுகையில், டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் இதுவல்ல. இந்திய அணி கூட இந்த ஆடுகளத்தில் திணறியது என்றார். முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் கூறும்போது, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 200 ரன்கள் எடுத்திருந்தால் இந்தியாவும் சிக்கலில் சிக்கி இருக்கும். ஆனால் இது இருதரப்பினருக்கும் ஒரே மாதிரியாக இருந்தது. இந்த ஆடுகளம் டெஸ்ட்டுக்கு ஏற்றதல்ல என்றார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில், இந்த ஆடுகளத்தை நாம் பார்க்க போகிறோம் என்றால், அது எவ்வாறு இயங்கக்கூடும் என்பதற்கு என்னிடம் பதில் இருக்கிறது. அணிகளுக்கு 3 இன்னிங்சை கொடுங்கள் என்றார். ஆனால் இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஆடுகளத்தை குறை சொல்லவில்லை. அவர் கூறும்போது, இந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்களின் நோக்கம் மற்றும் பயன்பாடு பற்றி சிந்திக்க வைக்கிறது. இந்த ஆடுகளத்தில் தான் ரோகித் சர்மா மற்றும் ஜாக்கிராவ்லி அரை சதங்கள் அடித்தனர் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *