புதுச்சேரியில் ஜனநாயகப் படுகொலையை நடத்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு – முக ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி, ஜனநாயகத்தைப் பட்டப் பகலில் பச்சைப் படுகொலை செய்யும் படுபாதகச் செயலையே லட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு, மீண்டும் அதனைப் புதுச்சேரியில் அரங்கேற்றியிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிற மாநிலங்களில் செய்தது போலவே எம்.எல்.ஏ.க்களை விலை பேசும் குதிரை பேரம் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்ததுடன், கிரண்பேடியை மாற்றிவிட்டு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை கூடுதல் பொறுப்பாக நியமித்தபோதே இதன் உள்நோக்கத்தைக் கண்டித்திருந்தேன். பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளையும், சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து, தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் நாராயணசாமி. ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலான செயல்பாட்டை வாழ்த்துகிறேன். தமிழகத்துடன் இணைந்து, புதுச்சேரியும் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில் ஜனநாயகப் படுகொலையை நடத்தியிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *