நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது தங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அது பற்றி கூகுளில் சர்ச் செய்தபோது அது இன்னென்ன நோய் என்று தெரியவந்ததாகவும் கூறி, டாக்டர்களிடம் பயத்துடன் ஆலோசனை கேட்கிறார்கள். இந்த மாதிரியான பயம் இப்போது பலரையும் சூழ்ந்திருக்கிறது. அந்த பயமே அவர்களுக்கு நோயாக மாறுகிறது. மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது. சுவாசத் தடை ஏற்பட்டாலே அது ஆஸ்துமா தான் என்ற பயம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. பல்வேறு வகையான நோய்கள் இருந்தாலும் எல்லா நோய்களும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை அல்ல. அப்படி ஒருவேளை ஆபத்தை விளைவிக்கும் நோயாக இருந்தாலும் அதற்கான சரியான சிகிச்சையை பெறுவதற்கு விழிப்புணர்வுதான் தேவை. அதனால் இல்லாத நோய்களை நினைத்து பெண்கள் பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. நெஞ்சுக்கூட்டில் நீர்கோர்த்திருத்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் நெஞ்சுவலி ஏற்படுவதுண்டு. சுவாசப் பகுதிகளில் ஏற்படும் நெருக்கடிகளும் நெஞ்சுப் பகுதியில் அவஸ்தைகளை ஏற்படுத்துவதுண்டு. நெஞ்சின் நடுப்பகுதியில் பாரம் ஏற்றியதுபோலவோ, நெஞ்சுப் பகுதி உடைவதுபோலவோ கடுமையான வலி ஏற்படுதல். வேலை செய்யும்போது வலி தோன்றுதல், ஓய்வெடுக்கும்போது வலி அகலுதல். வலியோடு நெஞ்சுப் பகுதியில் துடிப்பு ஏற்படுதல், சுவாச தடை உருவாகுதல், அதிகமாக வியர்த்தல்,நெஞ்சுவலியோடு இடது கைகளுக்கோ, இரு கைகளுக்குமோ, கழுத்துக்கோ வலி பரவுதல் போன்றவை கவனிக்கத்தகுந்தவை.
