அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அமெரிக்கா சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்தது. இந்த சூழலில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். இவரது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா சீனா இடையிலான உறவில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி உள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ஜோ பைடன் கடந்த 11-ந்தேதி சீன அதிபர் ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சீனாவின் நியாயமற்ற பொருளாதார செயல்பாடுகள், ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து, ஜனநாயக ஆர்வலர்களை ஒடுக்கும் நடவடிக்கைகள், சின்ஜியாங்கில் உய்குர் இன மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் ஜோ பைடன் தனது கவலையை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அமெரிக்கா சீனா உறவுகளில் கவனம் செலுத்துவது தொடர்பான சீன வெளியுறவு அமைச்சகத்தின் வருடாந்திர மாநாடு தலைநகர் பீஜிங்கில் நேற்று நடந்ததில் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி வாங் யி கலந்து கொண்டு உரையாற்றியபோது, முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் சீனாவை நோக்கி முன்வைத்த கடுமையான கொள்கைகளை ஜோ பைடன் நிர்வாகம் சரி செய்ய வேண்டும். அமெரிக்காவை சவால் செய்யவோ அல்லது மாற்றவோ எங்களுக்கு விருப்பமில்லை. அமைதியான சகவாழ்வு மற்றும் அமெரிக்காவுடன் பொதுவான வளர்ச்சியை நாட நாங்கள் தயாராக உள்ளோம். அதேபோல் அமெரிக்காவும் சீனாவின் முக்கிய நலன்கள் தேசிய கவுரவம் மற்றும் வளர்ச்சிக்கான உரிமைகளை மதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். சீன கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சீன அரசியலமைப்பை கறை படுத்துவது; தைவானின் பிரிவினைவாத சக்திகளின் தவறான சொற்களையும் செயல்களையும் ஆதரிப்பது; ஹாங்காங், திபெத் மற்றும் சின்ஜியாங் தொடர்பான விவகாரங்களில் சீனாவின் இறையாண்மையும் பாதுகாப்பையும் குறை மதிப்புக்கு உட்படுத்துவது ஆகியவற்றை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று கூறினார்.
