ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 4 ஓவர்களில் 19 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் நியூசிலாந்து அணி20 ஓவர்களில் விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. டேவோன் கான்வே 59 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 99 ரன்னும், மிட்செல் சான்ட்னெர் 5 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து வீரர்களின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதனால் 17.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 131 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டம் இழக்காமல் 99 ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வே ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.