டிராக்டர் பேரணி வன்முறை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்

டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் குடியரசு தினத்தில் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர். தடுத்த போலீசார் மீது விவசாயிகள் சிலர் வாளால் வெட்டியதாகவும், கொடி கட்டிய கம்பால் தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் உருவானது. நேற்று நடந்த வன்முறை சம்பவங்களில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 200 பேரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில், விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வெடித்த வன்முறை குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவை அமைக்கக் கோரி ஒரு வழக்கறிஞர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவும், அதற்கு காரணமானவர்களை கைது செய்யவும் டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடுமாறும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *