விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சியின் 28 வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. முன்னதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடும். அ.தி.மு.க., தி.மு.க.வினர் தனித்துப் போட்டியிடுவார்களா? தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு 17 லட்சம் வாக்குகளை மக்கள் அளித்தனர். தமிழக சட்டமன்ற பேரவைத் தேர்தலிலும் அதிகளவில் சாதிப்போம். மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு ஓரே வாய்ப்பு நாம் தமிழர் கட்சி என்பதால் தான், மக்களை நம்பி தனித்துப் போட்டியிடுகிறோம். மக்களிடம் ஆதரவு கேட்டதைப்போல ரஜினியிடமும் ஆதரவு கேட்போம். தூய தேசத்தை உருவாக்குவதே எங்களின் வாக்குறுதி என்று கூறினார்.
