இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் மிகவும் வெற்றி கரமாக முடிந்தது. தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய மண்ணில் 2-வது தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களையும், அனுபவமற்ற பந்து வீச்சையும் வைத்துக் கொண்டு ரகானே தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவில் சாதித்து காட்டியது. சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று நாடு திரும்பினார்கள். வீரர்கள் தனித்தனியாக தங்களது சொந்த நகருக்கு சென்றடைந்தனர். ஆஸ்திரேலிய பயணத்தில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 பேர் இடம் பெற்றிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது அறிமுக சர்வதேச போட்டியில் சாதித்தார். 29 வயதான அவர் பெங்களூரில் இருந்து தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு இன்று வருகிறார். கடந்த மாதம் 6-ந் தேதி தான் நடராஜனின் மனைவி பவித்ராவுக்கு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதேநேரத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால் முதன் முதலாக தனது குழந்தையை காணும் ஆர்வத்தில் நடராஜன் உள்ளார். சொந்த ஊர் திரும்பும் அவருக்கு ஊர்மக்கள் சார்பாக பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெட் பவுலராக சென்ற நடராஜன் தனது முதல் டெஸ்டில் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டும், மூன்று 20 ஓவர் போட்டிகளில் சேர்த்து 6 விக்கெட்டும் கைப்பற்றினார்.
