வெந்தயத்தில் உள்ள சபோனின் (Saponin – தாவர உணவுகளில் இருக்கும் ஒரு வகையான ரசாயனக் கலவை) நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நம் உடல் கிரகிப்பதைத் தடுக்கிறது. அத்துடன் இயற்கையாகவே உடல் உண்டாக்கும் கெட்ட கொழுப்புகளையும் குறைத்துவிடும். கர்ப்பக் காலங்களில் இதைச் சாப்பிடுவதால் கருப்பைச் சுருக்கங்கள் தூண்டப்படுகிறது. இதனால் பிரசவவலி குறைந்து, சுகப்பிரசவம் உண்டாக வாய்ப்பு உள்ளது.
வெந்தயத்தில் சபோனின் மற்றும் முசிலேஜ் (Mucilage) எனப்படும் கோந்து உள்ளது. இவை உண்ணும் உணவில் உள்ள நச்சுக்களுடன் கலந்து மலம் வழியாக வெளியேறுவதால் பெருங்குடலில் புற்றுநோய் ஏற்படாமல் தடுத்துவிடும். மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் உடல்ரீதியான பிரச்னைகளைத் தடுக்க ஹார்மோன் மாற்றுச் சிகிச்சையை சில மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் இதுபோன்ற சிகிச்சைக்கு அவசியமே ஏற்படாது.
தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க, பிரசவத்துக்குப் பிறகு வெந்தயத்தால் தயாரிக்கப்படும் கஷாயம் குடிக்கலாம். இது தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், பிறந்த குழந்தையின் எடையையும் அதிகரிக்கச் செய்யும்.