குளிர்காலத்தில் தண்ணீர் தாகத்தை பெரும்பாலும் உணரமுடியாது. அதனால் பருகும் தண்ணீர் அளவை குறைத்துவிடக்கூடாது. சிலர் பசிக்கும், தாகத்திற்கும் வித்தியாசம் தெரியாமலும் தடுமாறுவார்கள். போதுமான இடைவெளியில் தண்ணீர் பருகினால் அதிக பசி உணர்வு தோன்றாது. அதனால் தாகம் எடுக்கவில்லை என்றாலும் தண்ணீர் பருகிவிடுவது நல்லது. அது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.
காலை உணவுடன் நார்ச்சத்து, புரதம் அடங்கிய உணவு பதார்த்தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்தகைய உணவுகள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். அடிக்கடி பசிக்கவும் செய்யாது. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை எரிக்கவும் துணை புரியும்.
குளிர் காலத்தில் டீ, காபிக்கு மாற்றாக கிரீன் டீ பருகலாம். அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அத்துடன் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவும். உடலில் செலவிடப்படாத கலோரிகளையும் வேகமாக எரித்து உடல் எடையை கட்டுக்குள் வைத் திருக்கவும் துணைபுரியும்.