திருவாரூர் மாவட்டத்தில் அண்ணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர் வெட்டிக்கொலை- உறவினர் கைது

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மஜீதியா தெருவை சேர்ந்தவர் அப்துல்கனி(வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் அ‌‌ஷ்ரப் அலி(40). உறவினர்களான இவர்கள் இருவரும் மலேசியாவில் வேலை பார்த்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அப்துல்கனியும், அ‌‌ஷ்ரப் அலியும் மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர்.இந்த நிலையில் அப்துல்கனிக்கும் அவருடைய அண்ணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்துல் கனிக்கும், அ‌‌ஷ்ரப் அலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்துல்கனியின் அண்ணி, அ‌‌ஷ்ரப் அலிக்கு அத்தையாவார். இதனால் தனது அத்தையுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு அப்துல்கனியிடம், அஷ்ரப் அலி கூறி வந்து உள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து அப்துல் கனி கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி வீட்டைவிட்டு வெளியேறி அங்குமிங்கும் சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அப்துல்கனி தஞ்சையில் சுற்றித்திரிவதாக அ‌‌ஷ்ரப் அலிக்கு தெரிய வந்தது. நேற்று அதிகாலை 1.30 மணியளவில் அப்துல் கனி, தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் அ‌‌ஷ்ரப் அலி வந்தார். அங்கு வைத்து அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அ‌‌ஷ்ரப் அலி, தான் வைத்திருந்த அரிவாளால் அப்துல் கனியை சரமாரியாக வெட்டினார்.

இதில் கழுத்தில் பலத்த வெட்டுப்பட்ட அப்துல் கனி கீழே சரிந்து விழுந்தார். உடனே அ‌‌ஷ்ரப் அலி அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை துரத்திச்சென்று மடக்கிப் பிடித்தனர். இந்த நிலையில் புதிய பஸ் நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் காயம் அடைந்த அப்துல் கனியை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அப்துல் கனி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து அ‌‌ஷ்ரப் அலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *