கட்டாய வெற்றியை நோக்கி ஐதராபாத் – பிளேஅப் சுற்றை உறுதி செய்யும் முனைப்புடன் பெங்களூர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சன்ரைசஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ள பெங்களூரு அணி மீதமுள்ள 2 ஆட்டங்களில் 1-ல் வென்றாலே பிளேஅப் சுற்றை உறுதி செய்யலாம்.

கடைசி 2 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த பெங்களூரு அணி, ‘வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த அணியில் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் (4 அரைசதத்துடன் 417 ரன்), டிவில்லியர்ஸ் (4 அரைசதத்துடன் 339 ரன்), கேப்டன் விராட் கோலி ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர்.

பந்து வீச்சில் ‘சுழல் சூறவாளிகள்’ யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் அசத்தி வருகின்றனர். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்பு பெற்ற ஸ்டெயின் 4 ஓவர்களில் 43 ரன்களை வாரி வழங்கினார். வேகப்பந்து வீச்சு கூட்டணி சரியாக அமைந்தால் பெங்களூரு அணி மேலும் வலுவடையும்.

ஐதராபாத் அணியை பொறுத்தவரை 12 போட்டிகளில் விளையாடி (5 வெற்றி, 7 தோல்வியுடன்) 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இதனால் தங்களது கடைசி இரு ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் நிலை பொறுத்தே ஐதராபாத் அணிக்கு பிளேஅப் வாய்ப்பு அமையும்.

இன்றைய பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வீழ்ந்தால் ‘பிளே-ஆப்’ கனவு கலைந்து விடும். கடந்த ஆட்டத்தில் 87 ரன்கள் விளாசிய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்படுவதால், அவர் காயத்தில் இருந்து தேறாவிட்டால் ஜானி பேர்ஸ்டோ மீண்டும் விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார்.

பேட்டிங்கில் வார்னர், மனிஷ் பாண்டே, வில்லியம்சன், பந்து வீச்சில் ரஷித்கான் (17 விக்கெட்), டி.நடராஜன் (13 விக்கெட்), சந்தீப் ஷர்மா (8 விக்கெட்) ஆகியோரைத்தான் ஐதராபாத் அணி அதிகமாக சார்ந்திருக்கிறது. இவர்களின் கை ஓங்கினால் ஐதராபாத்துக்கு உற்சாகமான நாளாக அமையும். ஏற்கனவே பெங்களூருக்கு எதிராக 10 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணி இந்த முக்கியமான தருணத்தில் பதிலடி கொடுக்குமா? என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!