இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி அட்டவணை அதிகாரபூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல். போட்டி அடுத்த மாதம் 10-ந்தேதி முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தனி விமானத்தில் புறப்படுகிறார்கள். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அங்கு மூன்று ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. நவம்பர் 12-ந்தேதி ஆஸ்திரேலியா சென்றடையும் இந்திய வீரர்கள் சிட்னி நகரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அச்சமயம் அருகில் உள்ள மைதானத்தில் பயிற்சியிலும் ஈடுபடுவார்கள். இந்த போட்டிக்கான அதிகாரபூர்வ போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் பாரம்பரியமிக்க ‘பாக்சிங் டே’ டெஸ்ட் இந்த சீசனில் நடக்குமா? என்பதில் சந்தேகம் நிலவியது. ஏனெனில் அங்கு கடந்த 4 மாதங்களாக கடுமையான கொரோனா ஊரடங்கு நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஊரடங்கு நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து உடனடியாக போட்டி அட்டவணை வெளியாகி இருக்கிறது. மெல்போர்னில் டெஸ்ட் (டிச.26-30) நடப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

அத்துடன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு திட்டங்களை பின்பற்றி ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதிப்பது குறித்து மெல்போர்ன் கிரிக்கெட் கிளப், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், மெல்போர்ன் நகரை உள்ளடக்கிய விக்டோரியா மாகாண அரசு ஆலோசித்தன. இதில் 1 லட்சம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்தில் தினமும் ஏறக்குறைய 25 ஆயிரம் ரசிகர்களை அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

போட்டி அட்டவணையை வெளியிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லே கூறுகையில், ‘மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சவால்மிக்க எதிராளிகளில் ஒன்றாக விளங்குகின்றன. இந்த கோடை காலத்தில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு விளையாட வருகை தரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினரை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். முழுமையான பாதுகாப்புடன் வெற்றிகரமாக இந்த தொடரை நடத்தி முடிப்போம் என்று நம்புகிறோம். இந்திய வீரர்களுடன், அவர்களது குடும்பத்தினரை அனுமதிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ஆலோசித்து வருகிறோம்’ என்றார்.

இந்திய அணி முதலில் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் நவம்பர் 27-ந்தேதி நடக்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக நடத்தப்படுகிறது. ‘பிங்க் பந்து’ பயன்படுத்தப்படும் அந்த டெஸ்ட் அடிலெய்டில் டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை அரங்கேறுகிறது. அடிலெய்டில் இதுவரை நடந்துள்ள 4 மின்னொளி டெஸ்டிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு இரண்டு பயிற்சி ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதுகின்றன. இதே போல் டிசம்பர் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சிட்னியில் இந்தியா- ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையே 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி பகல்-இரவாக நடக்கிறது. உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இந்த முறை எந்த போட்டிகளும் இடம் பெறவில்லை. இந்த போட்டிகள் அனைத்தையும் சோனி டென்1, சோனி டென்3, சோனி சிக்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!