நடிகர் பி.யு. சின்னப்பா மரணமடைந்த நாள் செப்டம்பர் 23

புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா அல்லது பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர். 1916-ம் ஆண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உலகநாத பிள்ளைக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.

இவரது இயற்பெயர் சின்னசாமி. புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி. யு. சின்னப்பாவானார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் 15 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து அவர்களின் நாடகங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கினார். அவருடன் அப்போது நாடகங்களில் நடித்தவர்களில் குற்ப்பிடத்தக்கவர்கள் பி. ஜி. வெங்கடேசன், எம். ஜி. ஆர், எம். கே. ராதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தனது 19-வது வயதில் நாடகக் கம்பனியில் இருந்து விலகி நன்னய்ய பாகவதர், புதுக்கோட்டை சிதம்பர பாகவதார் போன்றோரிடம் இசைப்பயிற்சி பெற்று இசைக்கச்சேரிகள் செய்து வந்தார். எஸ். ஆர். ஜானகியின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி சந்திரகாந்தா மூலம் சினிமாவில் பிரவேசித்தார் சின்னப்பா. அதனைத் தொடர்ந்து 1938-ம் ஆண்டில் பஞ்சாப் கேசரி, அனாதைப்பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து சுமார் 25 படங்களில் அவர் நடித்திருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தாபனத்தினரின் மனோன்மணி (1942) வசூலில் பெரும் வெற்றியடைந்தது. டி. ஆர். ராஜகுமாரியுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தார்.

1944-ம் ஆண்டில் பிருத்விராஜ் படத்தில் தன்னுடன் நடித்த ஏ. சகுந்தலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராஜாபகதூர் என்ற ஒரு மகனும் உண்டு. ஜகதலப்பிரதாபனில் பிரதாபனாகத் தோன்றி ஐந்து இசைக்கருவிகளை வாசித்து அமர்க்களப்படுத்தினார். 1951-ம் ஆண்டு செப்டம்பர் 23-ல் தமது 35-வது வயதில் சின்னப்பா புதுக்கோட்டையில் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *