சத்தியமங்கலம் அருகே நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் கைது

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் செங்குந்தர் நகரை சேர்ந்தவர் சஜ்ஜீவ் (வயது 41). இவர் சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்தில் ஜீப் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் ரீனா. இவர்களுக்கு சுரஜ் என்ற மகனும், ஸ்ரீனிகா என்ற மகளும் இருக்கின்றனர் .இந்நிலையில் சஜ்ஜீவின் வீட்டு மாடியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன இன்சூரன்ஸ் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் விஜயலட்சுமி. இந்நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு சஜ்ஜீவின் வீட்டுக்குள் தலையில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று திடீரென்று புகுந்தது. உடனே அந்த கும்பல் தங்கள் கையில் இருந்த அரிவாள், கம்பு மற்றும் இரும்பு கம்பியால் ரீனாவை சரமாரியாக தாக்கி உள்ளது. இதில் வலி தாங்க முடியாமல் ரீனா கத்தி கூச்சலிட்டுள்ளார் . மேலும் ரீனாவிடம் இருந்து 13 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தையும் அந்த கும்பல் பறித்து சென்றது . அப்போது ரீனாவின் அலறல் சத்தம் கேட்டு பாலமுருகன், அவருடைய மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தனர். அப்போது அந்த கொள்ளை கும்பல் தங்களிடம் இருந்த ஆயுதங்களால் அவர்கள் 2 பேரையும் தாக்கியது. இதனிடையே சஜ்ஜீவ் வேலை முடிந்து அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். அப்போது அவரையும் கும்பல் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது . இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர் . இந்த கொள்ளை சம்பவம் பற்றிய புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து முகமூடி கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் பிரகாஷ் (25) என்பவரை கைது செய்திருக்கின்றனர் . பொறியியல் படிப்பு முடித்து உள்ள இவர் சத்தியமங்கலம் தினசரி சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கைது செய்யப்பட்ட பிரகாஷ், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ‘தன்னுடைய அண்ணன் திருமணத்துக்காக கடன் பெருமளவு வாங்கியதாகவும், அந்த கடனை அடைக்க தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறியிருக்கிறார் . தொடர்ந்து பிரகாஷ் கொடுத்த தகவலின் பேரில், 8 நபர்களை கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 13 பவுன் நகை, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், கம்பு, இரும்பு கம்பி, 2 மோட்டார்சைக்கிள்கள், ஒரு மொபட் போன்றவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *