போதை பொருள் சம்பவத்தில் பிரபல நகை வியாபாரி கைது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, அவரது கூட்டாளிகள் ரவீந்திரன், அனூப் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு இருந்தார்கள். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் கன்னட திரையுலகில் போதை பொருள் பயன்பாடு இருப்பது பற்றிய தகவல் வெளியானது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய கடும் விசாரணையை தொடர்ந்து போதை பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட பிரபல நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, உட்பட 9 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து இருந்தனர். இவர்கள் 9 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் . இந்த நிலையில் கைதான ரவிசங்கரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதன்படி நடிகை ராகிணி திவேதியுடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட ரவிசங்கர், ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே பண்ணை வீட்டில் நடந்த தொழில்அதிபர் மகள் பிறந்தநாள் விருந்திலும், பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்திலும் ராகிணி திவேதி, பெங்களூருவை சேர்ந்த நகை வியாபாரி வைபவ் ஜெயினுடன் சேர்ந்து தானும் போதைப்பொருட்களை உபயோகப்படுத்தியதையும் ரவிசங்கர் சம்மதித்து கொண்டிருக்கிறார் . இதையடுத்து கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு இருந்த வைபவ் ஜெயின் அதிலிருந்து மீண்டு விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரு வயாலிகாவலில் உள்ள வீட்டில் வைத்து நேற்று அதிகாலை வைபவ் ஜெயினை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *