லா லிகா கால்பந்து போட்டி : சாம்பியன் பட்டத்தை நெருங்கும் ரியல் மாட்ரிட்

கிரானடா,

ஸ்பெயினில் நடந்து வரும் பழமை வாய்ந்த லா லிகா கால்பந்து போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ரியல் மாட்ரிட், கிரானடா அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த ரியல் மாட்ரிட் அணி முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் கிரானடா அணியை வீழ்த்தியது. கொரோனா இடைவெளிக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியாக சுவைத்த 9-வது வெற்றி இதுவாகும்.

இதன் மூலம் 36-வது லீக் ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி 25 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 83 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 36 ஆட்டத்தில் விளையாடி (24 வெற்றி, 7 டிரா, 5 தோல்வி) 79 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

இவ்விரு அணிகள் இடையே சாம்பியன் பட்டத்தை வெல்வதில் கடும் போட்டி நிலவினாலும், ரியல் மாட்ரிட் அணியின் கையே ஓங்கி நிற்கிறது. இன்னும் 2 லீக் ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் ரியல் மாட்ரிட் அணி 4 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது.

இந்திய நேரப்படி வருகிற 17-ந் தேதி அதிகாலை நடைபெறும் லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட், வில்லார் ரியல் அணியை சந்திக்கிறது. இதில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை தனதாக்கி விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!