நாமக்கல்:
நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து வள்ளிபுரம் நோக்கி நேற்று மாலை 5.45 மணியளவில் சரக்கு வாகனம் ஒன்று வேகமாக சென்றது. இந்த வாகனம் காவேட்டிப்பட்டி அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அக்கம் பக்கத்தினர் வேனில் சிக்கி கொண்ட டிரைவரை மீட்டனர். திடீரென ஓட்டம் பிடித்த அவர் தலைமறைவானார். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், வாகனத்தில் ஏற்றி வந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் சுமார் 1½ டன் எடை கொண்ட ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், நுகர்பொருள் குற்றபுலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.