இறப்பின் விளிம்பில் தந்தைக்கு மகன் அனுப்பிய உருக்கமான வீடியோ பதிவு

ஐதராபாத்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 34 வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்பு சிகிச்சையில் அலட்சியம் இருப்பதாக கூறி தனது தந்தைக்கு ‘செல்பி வீடியோ’ ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த வீடியோவில், “என்னால் சுவாசிக்க முடியவில்லை. 3 மணி நேரமாக கெஞ்சியும் ஆஸ்பத்திரியில் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. இதயத்துடிப்பு நின்றுவிட்டது, நுரையீரல் மட்டுமே இயங்குகிறது. பை டாடி பை, அனைவருக்கும் பை” என்று பேசி அந்த வீடியோவை தனது தந்தைக்கு அனுப்பி இருக்கிறார். நெஞ்சை பதறவைக்கும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் அதிகாரிகள் கூறுகையில், கடந்த 24-ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சுவாச பிரச்சனை இருந்ததால், அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. ஆனாலும் திடீரென மாரடைப்பால் அவர் கடந்த 26-ந் தேதி உயிரிழந்தார் என்று தெரிவித்தனர்.

இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேந்தர் கூறுகையில், “அரசு மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளை மோசமாக காட்டும் வகையில் சமூக ஊடகங்களில் நியாமற்ற பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற பிரசாரம் மருத்துவமனை ஊழியர்களின் மனநிலையை பாதிக்கும்.

கொரோனா சிகிச்சை வார்டில் இருப்பவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக இணையம் மற்றும் தொலைபேசி வசதி வழங்கப்பட்டுள்ளது, அதை தவறாக பயன்படுத்தக்கூடாது. உயிரிழந்த அந்த வாலிபர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றுவிட்டு கடைசியாகத்தான் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்” என தெரிவித்தள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *