• January 29, 2020
0 Comments

புதுடெல்லி,

டெல்லியில், மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்திதுறை மந்திரி (தனிபொறுப்பு) ஆர்.கே.சிங்கை, தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.தங்கமணி கூறுகையில்,

தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்து வழங்கும் மின்சாரத்தின் சராசரி மின் தொடரமைப்பு மற்றும் வணிக இழப்புகள் தற்போது 14 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இவற்றை மேலும் குறைப்பதற்கு பகிர்மான மின்மாற்றிகளில் மீட்டர்கள் பொருத்தி முழுமையாக மின்சார இழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவற்றை முழுமையாக மாற்றுவதற்கு தமிழகத்தில் 4 லட்சம் மீட்டர்கள் தேவைப்படுகிறது. இதற்கு ரூ.1,200 கோடி நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. வாரியத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 6,000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும்.

ஆனால் தற்போது குறைவான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் பற்றாக்குறையை சமாளிக்க தனியார் மற்றும் வெளிசந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. வருகிற கோடை காலத்தை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து வழங்க வேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *