• January 18, 2020
0 Comments

பெங்களூர்:

கர்நாடக பா.ஜனதா எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான அனந்த்குமார் ஹெக்டே எல்லப்பூரில் நடந்த இடைத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

மகாராஷ்டிராத்தில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாக பதவி ஏற்று 80 மணி நேரத்தில் பதவி விலகினார். இந்த நாடகத்தை ஏன் நடத்தினோம் என்று தெரியுமா?

மகாராஷ்டிரா முதல்வர் பொறுப்பில் மத்திய அரசு நிதி ரூ.40 ஆயிரம் கோடி குவிந்து கிடக்கிறது. சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி வந்தால் நிச்சயமாக இந்த ரூ40 ஆயிரம் கோடி மாநில மேம்பாட்டு திட்டங்களுக்கு போகாது. அது பல்வேறு வி‌ஷயங்களுக்கும், சுயநல லாபத்துக்கும் பயன்படுத்தப்படும்.

இதை தடுப்பதற்காகவும், அந்த நிதியை திருப்பி அனுப்புவதற்காகவும் பா.ஜனதா நடத்திய நாடகமே பட்னாவிஸ் பதவி ஏற்பு ஆகும். அவர் பதவி ஏற்ற 15 மணி நேரத்துக்குள் சில நடவடிக்கைகளை எடுத்து அந்த பணத்தை பாதுகாத்து விட்டார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. தன் மீதான குற்றச்சாட்டை தேவேந்திர பட்னாவிஸ் மறுத்து உள்ளார்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப்மாலிக் கூறும்போது, “இது மாநிலத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். ஹெக்டே கூறியது உண்மையாக இருந்தால் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *