• November 17, 2019
0 Comments

ஆக்லாந்து,

நியுசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 4 போட்டிகளில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனல் இருந்தது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது.

மழையால் 11 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான மாட்டின் கப்தில் 20 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 50 ரன்களும், காலின் முன்ரோ 21 பந்துகளில், 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ரன்களும், விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட் 16 பந்துகளில், ஒரு பவுண்டரி, 5 சிக்சருடன் 39 ரன்களும் எடுக்க, 11 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 147 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்துக்கு அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஜானி பேர்ஸ்டோ 18 பந்துகளில், 2 பவுண்டரி, 5 சிக்சருடன்  47 ரன்களும், சாம் குர்ரன் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 24 ரன்களும் எடுத்து ரன்ரேட்டை கணிசமாக உயர்த்தினர். இதனால் பரபரப்பான கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது.

ஜேம்ஸ் நீஷம் வீசிய இறுதி ஓவரில் 3 பந்தில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து டாம் குர்ரனின் (12 ரன்) விக்கெட்டை எடுத்தார். ஆனால் அடுத்து களம் புகுந்த கிறிஸ் ஜோர்டான் 4-வது பந்தில் சிக்சர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து 5-வது பந்தில் 2 ரன் எடுத்த அவர் கடைசி பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார்.

இதனால் இங்கிலாந்தின் ஸ்கோரும் 11 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 146 ரன்களில் சமனில் முடிந்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்லப்பபட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து மோர்கன், பேர்ஸ்டோ களமிறங்கிய நிலையில், நியூசிலாந்து தரப்பில் டீம் சவுதி பந்து வீசினார். இந்த ஓவரில் தலா ஒரு சிக்சர் அடிக்க இங்கிலாந்து சூப்பர் ஓவரில் 17 ரன்கள் எடுத்தது.

பின்னர் 18 ரன்கள் இலக்கை நோக்கி பேட் செய்த நியூசிலாந்து கிறிஸ் ஜோர்டானின் அபார பந்துவீச்சில் ஒரு விக்கெட்டுக்கு 8 ரன்களே எடுத்தது. இதனால் சூப்பர் ஓவரில் வெற்றிக்கனியை ருசித்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-2 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *