• November 17, 2019
0 Comments

செயின்ட் லூசியா,

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து தொடங்கிய 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது சர்வதேச 20 ஓவர் போட்டி செயின்ட்லூசியாவில் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா அணியில், ஷபாலி வர்மாவும், ஸ்மிர்தி மந்தனாவும் களமிறங்கியனர். இருவரும் அதிரடியாக ஆடியதால் முதல் 5 ஓவர்களில் இந்திய அணி 72 ரன்களை எட்டியது.

அணியின் ஸ்கோர் 143 ரன்களை (15.3 ஓவர்) எட்டிய போது அரைசதம் அடித்திருந்த ஷபாலி 49 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 73 ரன்களில் கேட்ச் ஆனார். மந்தனா 46 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 67 ரன்களில் வெளியேறினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

அடுத்து 186 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு வெறும் 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷபாலி ஆட்டநாயகி விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *