• November 20, 2019
0 Comments

புதுடெல்லி:

2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ந் தேதி இந்திய வரலாற்றின் மறக்க முடியாத பக்கமாக பதிவாகி இருக்கிறது. அந்த நாளில் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.

ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்து, அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள குறிப்பிட்ட அவகாசம் வழங்கப்பட்டது. அந்த நடவடிக்கையை மோடி மேற்கொண்டதின் 3-வது ஆண்டு நினைவுதினம் நேற்று ஆகும். இதையொட்டி காங்கிரஸ் கட்சி மோடி அரசை கடுமையாக சாடி உள்ளது.

இதையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள அறிக்கையில், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான பிரசாரத்தால் தூண்டப்பட்ட அபத்தமான நடவடிக்கை. இது அப்பாவி மக்களுக்கும், நம்பிக்கைக்குரிய நாட்டு மக்களுக்கும் சொல்ல முடியாத பாதிப்பை ஏற்படுத்தியது. இது மோடி அரசின் ஆளுகை அணுகுமுறையின் சுருக்கம் ஆகும்.

நாடு மறந்து விடும் என்று கருதி, பிரதமரும், அவருடன் இருப்பவர்களும் 2017-ம் ஆண்டு முதல் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி பேசுவதை நிறுத்தி விட்டார்கள். துரதிர்‌‌ஷ்டவசமாக இந்த நாடோ, வரலாறோ அதை மன்னிக்காது, மறக்காது. இதை காங்கிரஸ் கட்சி உறுதி செய்யும். ஏனென்றால் நாங்கள் பாரதீய ஜனதாவை போல அல்ல. நாங்கள் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு உழைக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *