• October 19, 2019
0 Comments

ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து வரும் விமானத்தில் பாம்பு மற்றும் காட்டு பல்லிகள் உயிருடன் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு மலேசிய சுங்க இலாகா அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது பர்வேஸ்(வயது 36), சிவகங்கையை முகமது அக்பர்(28) ஆகியோர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், இருவரையும் நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர்கள் ஒருவித பதற்றத்துடன் பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், 2 பேரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது சிறிய பெட்டிகளில் பாம்பு மற்றும் பல்லிகள் உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இது தொடர்பாக முகமது பர்வேஸ், முகமது அக்பர் ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மலைபாம்பு, காட்டில் வாழும் பல்லிகள் போன்ற கொடிய விஷம் கொண்டவைகளை ஏன் சென்னைக்கு கடத்தி வந்தனர்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து கைதான 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *