• October 19, 2019
0 Comments

சென்னை:

சீன வானொலி தமிழ்ப்பிரிவு சார்பில் சீனா-இந்தியா இடையே பண்பாட்டை வலுப்படுத்தும் விதமாக சென்னை அண்ணா சாலை, பின்னி ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியதாவது, இந்தியா-சீனா உறவில் முன்பு எழுச்சி இருந்தது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக நம் உறவில் தளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி பெரும் முயற்சி எடுத்து வருகிறார். இந்த மாற்றத்தை இரு நாட்டு தலைவர்களும் செய்து காட்டுவார்கள்.

சீனாவில் தமிழை கொண்டு செல்வது எளிதான விஷயமாக இருக்கலாம். அதேசமயத்தில் சீன மொழியை மத்திய பள்ளிகளில் விருப்பபாடமாக படிப்பதற்கு சீன அரசாங்கம் சிறிய முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழ் மொழியை வளர்க்க உலகெங்கிலும் 1,000 தமிழ் வளர் மையங்கள் அமைக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய், ஹாங்காங், ஜாங்ஷூ ஆகிய 4 இடங்களில் தமிழ் வளர் மையங்களை உருவாக்க மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம். அந்த நிதி வந்ததும், அங்கே தமிழ் கற்றுக்கொடுக்கின்ற ஆசிரியர்கள் அல்லது தமிழ் கற்றுக்கொடுக்கும் சீனர்களை கொண்டு வகுப்புகள் எடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *