• October 21, 2019
0 Comments

தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பருவத்தேர்வுகளும், 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதியாண்டு தேர்வுகள் முறையும் அமலில் உள்ளன. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான முதல் பருவத்தேர்வு மற்றும் காலாண்டுத் தேர்வு கடந்த செப்டம்பர் 12 முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. அதன்பின் அனைத்து வகை பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. விடுப்பு முடிந்து அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது திருத்தப்பட்ட காலாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிலையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களின் காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை ஆய்வு செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘காலாண்டுத் தேர்வில் பின்தங்கி யுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்கள் மதிப்பெண் குறைந்த பாடங்களில் காலை, மாலை நேரங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தலாம். மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் கூடுதல் நேரம் பணியாற்றி, அவர்களின் தேர்ச்சிக்கு உதவ வேண்டும். குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும், பயிற்சி பெறும் மாணவர்களின் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்று விட வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *