• September 18, 2019
0 Comments

சென்னை

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் விக்னேஷ்(24), மகள் வித்யா(22) இருவரும் சென்னையில் தங்கி உள்ளனர். விக்னேஷ், சிறுசேரியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்திலும், அவருடைய தங்கை வித்யா, தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாகவும் வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு திருநள்ளாற்றில் நண்பரின் திருமணத்திற்கு சென்ற வித்யா நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் இருந்து அரசு பேருந்தில் ஏறி விட்டதாகவும், காலையில் கோயம்பேடு வந்து விடுவதாகவும் தனது அண்ணனுக்கு செல்போனில் வித்யா தகவல் தெரிவித்தார். ஆனால் நேற்று காலை வித்யாவின் தந்தை ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட மர்மநபர்கள், “உங்கள் மகள் வித்யாவை நாங்கள் கடத்தி விட்டோம். ரூ.10 லட்சம் கொடுத்தால் அவரை உயிருடன் ஒப்படைப்போம். பணத்தை தயார் செய்து வையுங்கள்” என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டனர்.

சிறிது நேரத்தில் விக்னேசையும் தொடர்புகொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மர்மநபர்கள் மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், இதுபற்றி கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வித்யா கடத்தப்பட்டது குறித்தும், கடைசியாக வந்த செல்போன் இணைப்பு மற்றும் தற்போது மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் இணைப்பு எங்கு உள்ளது? என்பது குறித்தும் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் வித்யா உண்மையாகவே கடத்தப்பட்டாரா? அல்லது கடத்தல் நாடகம் ஆடுகிறாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *