• September 19, 2019
0 Comments

சென்னை,

திருப்பணி செய்வதாக கூறி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் நன்கொடை வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் 2 வாரத்துக்குள் பதில் அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாத்தூரை சேர்ந்த திருஞானம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எங்கள் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான ஸ்ரீ சர்வ சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆனால், துரைராஜ் என்பவர் கோவில் திருப்பணி குழுவின் தலைவர் என்று தன்னை அறிவித்து கொண்டு, சாமியின் பெயரை சொல்லியும், கோவில் திருப்பணிக்கு என்று கூறியும் பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் பணம் வசூலிக்கிறார்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறையிடம் புகார் செய்ததை தொடர்ந்து,‘பக்தர்கள் யாரும் நன்கொடை கொடுக்க வேண்டாம் என்றும், மோசடி பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாம்’ என்றும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அதிகாரி எச்சரிக்கை செய்து கோவில் முன்பு மிகப்பெரிய பதாகைகள் வைத்தார். இந்நிலையில் இந்த பதாகைகளை அகற்ற உத்தரவிட கோரி துரைராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும் துரைராஜ் தனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரது ஆதரவு உள்ளது என்று கூறி தொடர்ந்து நன்கொடையை வசூலித்து தன் சொந்த செலவுக்கு அதை பயன்படுத்தி வருகிறார்.

இதனால், அவர் மீது இந்து சமய அறநிலையத்துறை செயல் அதிகாரி, மாதவரம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகார் விசாரணையில் உள்ள நிலையில், அதன்பின்னரும் நன்கொடை வசூலிப்பதை அவர் நிறுத்தாததால், கடந்த ஆகஸ்டு 19-ந் தேதி இந்து அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் பயன் இல்லை. எனவே எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்.இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *