• September 19, 2019
0 Comments

சென்னை,

இந்தியா முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம்-2019, அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய விதியில் இதற்கு முன்பு ரூ.50, ரூ.100 என வசூலிக்கப்பட்ட போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை, பல மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.

ஆனால் இந்த புதிய சட்டம் இன்னும் தமிழகத்தில் அமலுக்கு வராத நிலையிலும், வாகன ஓட்டிகள் தங்களது நிலையை சரிப்படுத்திக் கொண்டுவிட்டனர். வாகன வேகம், ஹெல்மெட் அணிதல், சீட் பெல்ட் அணிதல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டனர். இதற்கு காரணம், புதிய சட்டம் அமலாகியுள்ள பல மாநிலங்களில் இருந்து கிடைக்கப் பெறும் தகவல்கள் அனைவரையும் எச்சரிக்கை செய்துள்ளளது.

இந்நிலையில் இந்த புதிய விதியில் அபராதத் தொகையை மிகக் கடுமையாக உயர்த்தியது சரியா? தவறா? என சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய விதியில், ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத ஜெயில் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.

தகுதி இழப்பு செய்த பிறகு வாகனத்தை ஓட்டினால் விதிக்கப்பட்ட ரூ.500 அபராதம், ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுவிட்டது. அபாயகரமாக வாகனத்தை ஓட்டுவதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால் அபராதத்தோடு 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. போக்குவரத்து சீராகச் செல்ல இடையூறாக இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். போக்குவரத்துக்கான அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமல் போனாலும், அவர்கள் கேட்கும் தகவல்களை கூறாமல் இருந்தாலும் ரூ.2 ஆயிரம் அபராதம் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் உள்ள 63 தண்டனைப் பிரிவுகளில் 26 பிரிவுகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது. தமிழகத்திலும் விரைவில் இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு அவை அமலுக்கு வரவுள்ளன என்று அதிகாரி ஒருவர் கூறினார். ஆனாலும் சில இடங்களில் கூடுதல் அபராதத் தொகை ஏற்கனவே வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.

தமிழகத்தில் உயிரிழப்புக்கு ஏதுவான விபத்து ஏற்படும் காரணங்களாக பெரும்பாலும், வாகனங்களின் அதிக வேகம், அபாயகரமாக வாகனத்தை செலுத்துதல், ரேசில் ஓட்டுவதுபோல் செல்லுதல், ஹெல்மெட் – சீட் பெல்ட் அணியாமல் செல்லுதல் போன்றவைதான் உள்ளன. எனவே அந்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டங்களை அமல்படுத்தும் நடைமுறைக்கான புதிய விதிகளை தமிழக அரசு வகுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *