• August 24, 2019
0 Comments

தாம்பரம்,

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியில் இருசக்கர வாகனம் கேட்பாறற்று நின்றது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் தாம்பரம் போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் இருக்கைக்கு அடியில் 500 ரூபாயில் ஒரு கட்டு, 200 ரூபாயில் ஒரு கட்டு என மொத்தம் ரூ.70 ஆயிரம் பணத்துடன், இருசக்கர வாகனத்தை மீட்ட போலீசார், அதன் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில், அந்த இருசக்கர வாகனம் போரூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் (47) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது.
மேலும் சொந்தமாக நிறுவனம் நடத்தி வரும் தேவராஜ், தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக அங்குள்ள வங்கியில் பணத்தை எடுத்து, இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு, இருசக்கர வாகனத்தை அலுவலகம் முன்பு நிறுத்தி இருந்தார்.

இதனையறிந்த மர்ம நபர்கள் பைக்கை திருடிச்சென்று, தாம்பரத்தில் விட்டு சென்று உள்ளனர். ஆனால் இருக்கைக்கு அடியில் ரூ.70 ஆயிரம் இருந்ததை மர்மநபர்கள் கவனிக்காததால் அது தப்பியது. இதையடுத்து பணத்துடன் இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது குறித்து தேவராஜுக்கு தாம்பரம் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்படி நேற்று மாலை தாம்பரம் போலீஸ் நிலையம் வந்த தேவராஜிடம், ரூ.70 ஆயிரத்துடன் இருசக்கர வாகனத்தை போலீசார் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *