• August 24, 2019
0 Comments

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், இஸ்ரோவின் தொழில்நுட்ப பிரிவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். ரஷ்யா மற்றும் அதன் அருகிலுள்ள நாடுகளின் விண்வெளி அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து அந்த பிரிவு செயல்படும் என்று குறிப்பிட்டார்.விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்புக்காக பொலிவியா அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் கடந்த மார்ச் மாதம் இஸ்ரோ செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 30லிருந்து 33 ஆக உயர்த்த வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுக்கப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார். சீட்டு திட்டத்தில் முதலீட்டாளர்களின் நலன் காக்கவும், முறைப்படுத்தவும் சிட் பண்ட்ஸ் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகுக்கும் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக அவர் கூறினார். பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உர மானியத்திற்காக 2019 – 2020 ஆம் ஆண்டில் 22 ஆயிரத்து 875 கோடி ரூபாய் வழங்கவும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *